Wednesday, July 05, 2006

மரணம் உதவும்--தேன்கூடு போட்டி

தேன்கூடு-போட்டி/மரணம்--5/7/2006

அவன் அதுவரை மரணத்தைப் பற்றி பயப்படாதவன். நெருப்புன்னு சொன்னா வாய் வெந்தா போகும் என்ற வாக்குவாதம் வேறு. அவன் கவலைப் பட்டதெல்லாம் எஞ்சினீயராகப் படிக்கும்மகனை அடுத்த கட்டஉயர்வாக அமெரிக்காவுக்கு அனுப்புவது எப்படி என்றுதான்.

எல்லாருக்கும் உண்டான நியாயமான ஆசைதானே.
மகனும் அப்பாவை ஏமாற்றவில்லை.
ஊர் சுத்தப் போகவில்லை. வகுப்பு "கட் " செய்யலை..எல்லாவிதமான அவசியமான துணைவகுப்புகளுக்கும் போக
அப்பா உதவி செய்தார்.
அலுவலகத்திலிருந்து இதற்காகவெ 10 மைல் தூரத்திலிருந்து,தன்னுடைய ஸ்கூட்டரில் பயணம் வந்து,அது மழை நாளோ, வெய்யில் நாளோ மகன் விரும்பும் டியூஷன் வகுப்புக்குக் கூட்டிக் கொண்டு போனான்
அதே ஸ்கூட்டரை மகன் கையில் ஒப்படைக்க அவனுக்குமனம் இல்லை.சாலைகள் சரியில்லை. மகனைப் பாதுகாக்க வேண்டும்.பசிக்கு ஏதாவது வாங்கித் தர வேண்டும். தான் போகாத உயரத்துக்கு அவனை
செல்ல வைக்க வேண்டும்

.நான் அவனைக் கேலி செய்ததுண்டு. இப்படியாவது கஷ்டப்படாவிட்டால் என்னப்பா, நம்ம சென்னை போதாதா? இங்கே இப்போதுகிடைக்காத வேலையா?ம்ஹூம்.யாராலும் அவன் மனதை மாற்ற முடியவில்லை.இதற்காகவே தான் செய்யும் வேலையில் மற்றவர்கள் போக மறுக்கும் இடங்களுக்குப் போய்,

வெற்றிகரமாக அரசாங்கப் பணிகளை முடித்து
அவார்ட்ஸ் & ரிவார்ட்ஸ் பெற்றுக்கொண்டான்.வேலை வேலை ஓயாத வேலை.விருந்துக்கோ மருந்துக்கோ நேரமில்லை.கேட்டால் அதே சிரிப்பு.

உடம்பு ஒத்துழைக்க மறுக்கும்.முதுகு கெஞ்சும், எனக்குக் கொஞ்சம் ஸ்கூட்டரிலிருந்து விடுதலை கொடு என்று.
அப்போதெல்லாம் இருக்கவே இருக்கிறது, நண்பனின் கார்.அலுவலகத்துக்கு லீவு சொன்ன நாள் கிடையாது.
இடைப்பட்ட காலத்தில் அவன் அம்மாவும் நோய்வாய்ப் பாட்டதுதான்அவனுக்கு அதிர்ச்சி.கொஞ்ச நாட்களுக்கு அன்னையும் ஆஸ்பத்திரியுமாகக் கழித்தான்.இவ்வளவுக்கும் நடுவில் அவன் அலுத்துக் கொண்டு நான் பார்த்ததே இல்லை.

இந்த ஒரு சமயத்தில் தான் அவன் வருந்தி நான் பார்த்தேன்.அழுதும் விட்டான். அம்மா என்னை விட்டுப் போய் விடுவாளா என்று.நாங்கள் நானும் அவன் அம்மாவும் சேர்ந்துஅவனை மீண்டும் சரிப்படுத்தினோம்.

மற்றபடி சிரிப்பு ,சினிமா இவைகள் அவனுக்கு மிகவும் பிடித்த ,கருவிகள் .நன்றாகப் பாடுவான்.
எங்கிருந்தோ வந்தான், பாரதிப் பாட்டு ரொம்பப் பிடிக்கும்.
அதன் முடிவில் படிக்காத மேதை படத்தில்
ரங்கராவ் அவர்கள் சிவாஜி கணேசனை நினைத்து
'ரங்கா ரங்கா ' என்று பாடுவது தனக்கு மிகப் பொருத்தம் என்பான் .
.எனக்கு முதலில் இவன் மூலம்தான்ஜோக் புத்தகம் பரிசு கிடைத்தது.. அவனிடமிருந்து கேட்டதுதான் இந்த யானை,எறும்பு,என்சைகிளைப் பிடியா. முதலான கடி வகை அறுவைகள்
சரி மரணத்துக்கும் இவனுக்கும் என்ன உறவு?அவனும் மரணமும் ஒரு இரவு சந்தித்து விட்டார்கள்.இரவு அம்மாவுக்குத் துணையாகப் படுக்கச் சென்றவன் அந்த அம்மாகால் பக்கத்திலேயே உயிரையும் கொடுத்து விட்டான்.தூக்கத்தில் உயிரையே வாங்கும் sleep apnea!
அதீதமான குறட்டை விடுகிறவர்களுக்கு சில சமயம் மூச்சு தடைபடுமாம். அப்போதேமார்படைப்பு, மரணம்.
ஒரு நல்லது நடந்தது.அவன் மகன் வெளிநாடு போனான்.அவனுக்குப் போவதற்காகவும், படிப்பதற்காகவும் அந்த பல்கலைக் கழக பண உதவியும் கிடைத்தது. இவன் ஒடி ஓடி சம்பாதித்ததற்கும் ஒரு மதிப்பு கிடைத்தது. ஒரு லட்சியம் நிறைவேறவும்அவன் மரணம் உதவியது.

16 comments:

இளவஞ்சி said...

// இவன் ஒடி ஓடி சம்பாதித்தற்கும் ஒரு லட்சியம் நிறைவேறவும்அவன் மரணம் உதவியது.//

ஒன்றில் இழப்பில் மற்றொன்று கிடைக்கிறது!

முதல்முறை புரிய சற்று சிரமமாக இருந்தது.

போட்டிக்கான என் வாழ்த்துக்கள்!

manu said...

வணக்கம் இளவஞ்சி.இது அனுபவம் தான். ஆகையினாலே பதிப்பதற்குமுன் எடிட் செய்யாமல் விட்டுவிட்டேன்.
முதல்தரம் இங்கே வந்தீர்கள். மகிழ்ச்சிப் பதிவு ஒன்றும் போட்டு விடுகிறேன்.இறந்தவனுக்கு அங்கீகாரம் தேடுகிறேன்.அவ்வளவுதான்.மரணம் பாதிப்பது மற்றவர்களைத்தான்.
இறந்தவர்களை அல்ல.நன்றி இளவஞ்சி.

கீதா சாம்பசிவம் said...

கடவுளே, ஏன் இத்தனை கொடுமை? இது போட்டிக்காக எழுதி இருக்கீங்களா? நிஜமா? கற்பனைனாலே தாங்க முடியலை.

manu said...

நம்புங்கள், கீதா. இது நடந்தது. இன்னும் ஆறாதவடு.
கற்பனையே இல்லை துளிக்கூட.

கார்த்திக் பிரபு said...

advances wishes for the competition

manu said...

karthick, thanks.
I just shared my shock and sorrow with Thenkoodu. antha MARANAM enRA vaarththai ennai baathiththathu.
I just wrote what I felt.
so result does not matter.

மு.கார்த்திகேயன் said...

வாழ்த்துக்கள்.. போட்டிக்காக எழுதிய கதை என் உள்ளத்தையும் வென்றது.. சில நேரம் உண்மைக்கு நிறைய கனம் இருக்கும் என்பது மெய் தான் போல..

துளசி கோபால் said...

மரணம்- அனுபவித்தவனுக்கு நிம்மதி.

அடுத்துள்ளவனுக்கு .....?
என்றும் மாறாத வலி.

manu said...

உணமைதான் துளசி.புத்தர் சொன்னதுபோல்,
,மரணம் தொடாத வீடு கூட உண்டா?

ILA(a)இளா said...

நல்ல கதை, போட்டிக்கு என் வாழ்த்துக்கள்

manu said...

இளா,
வணக்கம். வாங்க. கதையல்ல நிஜம்தான்.

என்(சின்ன) தம்பிதான் இது.அவனுக்குத் தமிழும் எழுத்தும் உயிர்.
அவனுக்கு ஒரு நினைவுமாலை என்று வைத்துக் கொள்ளலாம்.
நன்றி.

manu said...

கார்திகேயன்,

வணக்கம்.
உண்மை சுடும்னு தெரியும். அதுவே கனக்கவும் செய்கிறது.

மெய்யான நிகழ்ச்சிகள் கதையைவிட அதிதமான கற்பனையாக அமைவது
அதைப் படைக்கிறவன் காலம் என்பதால் தான்.
நன்றி கார்த்திகேயன்.

கீதா சாம்பசிவம் said...

மனு, உங்கள் துக்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன். புத்திர சோகம் என்றால் என்ன மாதிரிக் கொடுமை அது? இப்போதான் என் நாத்தனார் கணவர் தன் 84 வயது அப்பா இருக்க அவர் போய்க் கிழவர் துடித்துக் கொண்டு இருக்கிறார். அதுவே இன்னும் உறுத்துகிறது. உங்களுடையது படித்ததும் இன்னும் மனம் ஆறவில்லை.

manu said...

கீதா, ரொம்ப நன்றிம்மா.
பொறுமையாகத் தான் இருந்தார் எங்க அம்மா.
யாரையும் நோகவில்லை.

16 மாதம் நோம்பு மாதிரி
மவுனமாக இருந்து,
அவளும் தன் கணவரையும் மகனையும் தேடிப் பயணித்து ஒரு வருஷமும் முடிந்து விட்டது.
வார்த்தையால் என் நன்றி சொல்ல முடியாது.
ஆதரவுக்கு நன்றி.
யு.பி.எஸ் வேலை சரியில்லை. உடனே பதில் போட முடிய வில்லை.

தி. ரா. ச.(T.R.C.) said...

இரவு அம்மாவுக்குத் துணையாகப் படுக்கச் சென்றவன் அந்த அம்மாகால் பக்கத்திலேயே உயிரையும் கொடுத்து விட்டான்.
வருத்தமான விஷயம்தான்.காலத்தாலும் மாற்றமுடியாது. இது போன்ற நிகழ்ச்சி எங்கள் குடும்பத்திலும் நடந்தது. தன் அக்காவை (என் மனைவி) பார்பதற்கு ஆசையாய் வந்தான் அவள் தம்பி.சிற்றுன்டி அருந்திவிட்டு வீட்டிற்கு போவதற்குள் மார்பு வலிக்கிறது என்றான் உடனே பக்கதில் இருந்த மருத்துவ மனையில் சேர்த்தோம். மாமனார் மமியாருக்கும் கூடசொல்லமுடியவில்லை. மனைவிக்கும் மட்டும் சொல்லி வரவழைத்தோம். ஆனால் எல்லாம் 4 மணி நேரத்தில் முடிந்து விட்டது.35 வயது மனைவி,14,12. வயதில் மகன்கள்,84,74 வயதில் அப்பா அம்மா, அக்கா போய்விட்டான். மாமனாரும் ஒருவருடத்திலேயே புதிர சோகத்திலேயே போய்விட்டார். இது போன்ற சோகம் பல இடத்தில் உண்டு ஆனால் அது மற்றவர்களுக்கு ஆறுதல் தராது தி ரா ச

manu said...

ஆமாம் தி.ரா.ச.
மறக்காது.
உங்கள் மனைவியை நினத்தால் ரொம்ப வருத்தமாக இருக்கிறது.
தம்பி குடும்பம் வளர்ந்து இருக்க வேண்டும்.நன்றாக இருக்கட்டும்.
வரப்போகும் தலைமுறை எல்லாம் பெற்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

கி.இராஜநாராயணன் அய்யா--1

எனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசய...