Tuesday, May 12, 2015

Dream merchants


இத்தனை படங்கள்
இவ்வளவு நட்சத்திரங்கள், எல்லோருமே என் விஷயத்தில் மிகவும்
நன்மை செய்தவர்கள். இந்தப் பதிவிலும் இதற்கு முந்தின பதிவிலும் எனக்கு உள்ள சினிமா (மெமரி) டைரக்டரியிலிருந்து
சில நபர்களின் புகைப்படங்கள்,திரை ஸ்டில்கள் என்று முடிந்த வரை (எனக்குப் பிடித்த நடிக நடிகையரின்) கொடுத்து இருக்கிறேன்.

எத்தனையொ ஆயிரக்கணக்கான முகங்கள் திரையில் மின்னி நமக்கு இன்பத்தையும் ,நிறைவையும் கொடுத்து இருக்கிறார்கள். அவர்களில் சிலர் இவர்கள்.






Posted by Picasaஇவர்களில் முதல்வர் வேறு யாரக இருக்க முடியும். நம்ம சிவாஜி சார் தான்.
அடுத்தது.எஸ்.வீ.ரங்கராவ். எப்போதுமே இனிமையான கம்பீரம். நாகரீகமான தோற்றம்.பண்பட்ட நடிப்பு. நமது சொந்தப் பெரியப்பாவையோ மாமாவையோ நினைவு படுத்தும் கனிவு.
எப்போதுமே ஆனந்தம் த்ும் கல்யாண சமையல் சாதம் இவர்.
அலுக்கவே அலுக்காத குரல். இறைவன் இவரை இன்னும் கொஞ்ச நாள் விட்டு வைத்து இருக்கலாம்.
இவருக்கு அடுத்தாற்போல் நம்மைக் கவருவது பானுமதி அம்மாவும் சாவித்திரியும் தான்.
ஒரு பாசமலர் தங்கை, ஒரு அன்னை, ஒரு மயங்குகிறாள் ஒரு மாது பாட்டு,
'சொன்ன பேச்சை கேக்கணும் முன்னும் பின்னும் பாக்கணும்"
பூவாகிக் காயாகி.//
வெங்கடாசல நிலையம் வைகுண்டபுர வாசம்//
இதே போல் மறக்க முடியாத வாய்த்துடுக்கு,சிவாஜி சாருக்கு இணையான நடிப்பு.
அவரது எழுத்துக்கள் , பன்முகத்திறமை

எல்லாமே இவரைப்போல் பெண்கள் இன்னும் நிறைய
திரை உலகுக்கு வரவில்லையே என்று தோன்றும்.
சாவித்திரி அம்மாவும் இதே போல்,
ஆனால் பாச மழை,காதல் ரசம் கண்ணாலெயே பேசுவது
அந்தக் காலத்தில் கண்களுக்கு யார் ஒப்பனை செய்தார்களோ தெரியாது.
உடல் வளம் எப்படி இருந்தாலும் முகம் நினைவில்
நிற்கும்படியாக மேக்கப் செய்து இருப்பார்கள். அவை அழியாத சித்திரங்கள் ஆகி நம் மனதை நிரப்பும்.
இதே போல் பத்மினியும், வைஜயந்தி மாலா,சரொஜாதேவி அம்மாவும் நடிப்பினாலும் திரை அழகினாலும் எங்களை மயக்கினவர்கள்.
Add caption
THoo  pyaar kaa  saagar hai. Balraj   Sahni.
Add caption

Saturday, October 04, 2014

வழி,தங்குமிடம் ராமேஸ்வரம்


எல்லொருக்கும் இராமேஸ்வரம் என்பது ஒரு புண்ணிய யாத்திரை தலமாகத் தான் தெரியும். எனக்கு அப்படித்தான்.
இந்தப் பதிவு ஒரு பின்குறிப்பாக எழுதுகிறேன்.
ஒரு நாள் பயணமாகவே போய் விட்டு வரக்கூடிய இடம் தான். ஆனால் அங்கே தங்கி வந்தால் இன்னும் நிறைய இடங்களைப் பார்க்கலாம்.
மதுரையில் இருந்து நான்கு மணிநேரப் பயணம்.
ராமனாதபுரத்தில் நல்ல வசதியுடன் விடுதிகள் இருக்கின்றன.
அங்கே இறங்கி சேது விலிருந்து பயணத்தை ஆரம்பிக்கலாம்.
வைணவர்கள் சேது தீர்த்தத்தில் குளித்துவிட்டு அடுத்த நாள் ராமேச்வரம் அக்கினி தீர்த்ததில் குளிப்பார்கள்.
சேதுவில் சங்கல்பம் செய்து முன்னோர்களுக்கு நினைவாக கட்லில் குளித்து அங்கே வாழும் வசதி குறைந்தவர்களுக்கு நாம் அணிந்த் உடையோ ,அன்னதானமோ செய்யலாம்.
அங்கிருப்பவர்களே நமக்கு சொல்லிக் கொடுப்பார்கள்.

அங்கெ பக்கத்திலேயே ராமன் தபம் செய்த திருப்புல்லணை ஆதி ஜகன்னாதன் கொவிலுக்குப் போனால் மதிய சாப்பாடு உறுதி.
கடலுக்குக் குளிக்கப் போவதற்கு முன்னால் சொல்லிவிட்டால் போதும். சமைத்து வைத்துக் கொடுப்பார்கள். ஆஹா அந்தப் பசிக்கு அந்தப் பொங்கல் அமிர்தம் தான்.
இங்கு இராமபிரானுக்கு கடலரசன் சேதுப் பாலம் கட்ட வழி சொல்லிக் கொடுத்தானாம்.
கடலைப் பிளந்து இலங்கைக்குப் பாலம் அமைத்தால் கடலில் உள்ள உயிர்கள் அழியும், அதனால் மிதக்கும் பாலம் ஒன்றை நளன் என்னும் தேவ சிற்பியை வைத்துக் கட்டலாம், என்று யோசனை சொல்ல, இராமனும் நளனை
வேண்ட வானரங்கள் உதவியுடன் அதிகக் கனமில்லாத கற்களால் சேதுப்பாலம் அமைந்ததாம்.
அதனால் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அப்போது இன்னும் சிறப்பாக இயங்கி இருக்கிறது என்று எனக்குத் தெளிவாகியது.
பக்கத்தில் தேவிபட்டினம் என்னும் கடலோர கிராமத்தில் நவபாஷணம் என்னும் நவக்கிரக பரிகார தலம் இருக்கிறது.
கடலுக்குள் போய் ராமபிரான் ஸ்தாபித்ததாகச் சொல்லப்படும் கிரஹங்களைச் சுற்றி வந்து அர்ச்சனை செய்யலாம்.
அங்கேயும் தானம் செய்யும் வழக்கம் உள்ளது. நம் பின்னாலேயெ அவர்கள் குறி வைத்து வருவதைப் பார்த்தால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்

அங்கிருந்து நேரே ராமேஸ்வரம் தான். அங்கநிறைய தங்கும் விடுதிகள் வந்து விட்டன.
நாற்பது வருடங்கள் முன்னால்
நமக்கு பரிகாரம் செய்ய உதவியாக இருக்கும் சாஸ்திரிகள் வீட்டிலேயே தங்கவும், சாப்பிடவும் வசதி செய்வார்கள்.
இப்போது நமக்குத்தான் அந்த வசதி எல்லாம் போதாதே..
அதனால் (பண) வசதிக்கு ஏற்ப விடுதிகள் கிடைக்கின்றன.                                                                                                        
ஸ்ரீ ராமனாத ஸ்வாமி ஆலயத்துக்குள் 22 தீர்த்தங்கள் இருக்கின்றன.
எல்லாம் நாம் செய்த , செய்யப் போகும் பாப விமோசனம்,,(நிவர்த்தி) செய்யக் காத்துக் கொண்டு ,அந்தக் கிணறுகளிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொடுப்பதையே சேவையாகச் செய்யும் நண்பர்களோடு
தயார் நிலையில் உள்ளன.
எத்தனை உயர்ந்த சேவை.!!
பர்வதவர்த்தினி அம்மனும், இராமலிங்கமும் ஜோதியாகத் அவ்வளவு ஓளியோடு காட்சி தருகிறார்கள்,
அங்கெ இன்னும் கை நீட்டும்
காட்சி வரவில்லை.
பக்தியும் சுத்தமும் ஆன்மீகமும் இருந்தன.
ஏழ்மையும் இருந்தது.

இன்னோரு தடவை என்னை இராமேஸ்வரம் போக வைத்த தமிழ் மணத்துக்கு நன்றி..

Wednesday, October 01, 2014

1970 லிருந்து 83 வரை 6-27-2006







காப்டன் ஹாடாக்,டின் டின், ஸ்னொயீ ,கால்குலஸ் எல்லொரும் மகிழ்விக்க வந்தது ஆஸ்டரிக்ஸ் காலத்தில் தான். நான் இவர்களை நினைவு படுத்திக்கொள்வது ஒரே ஒரு காரணத்துக்காகத்தான்.
நன்றி மறக்கக் கூடாது.
1977,78 காலங்களில் மழைக்காலம் என்றால் மழை பெய்யும்!!!!1
அப்பொது செப்டம்பர் விடுமுறையும் சேர்ந்து கொள்ளும்.
பசங்க விளையாட வெளியே போக முடியாது. அது போல் ஒரு நச நசா மழை. எத்தனை நேரம் காரம்பொர்ட் விளையாட? எத்தனை நேரம் வேகவச்ச கடலையைக் கொறிக்க.?

சக்தியை செலவழிக்க ஒரு வழி வேணுமே.
அப்போது மவுண்ட் ரோடு தான் அடைக்கலம்.
கொஞ்ச நேரம் விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிட்யுட்.
மூன்று மாடிகளும் பார்த்து, ஒரு கூடை, ஒரு பிள்ளயார், ஒரு சிப்பி(எல்லாம் சேர்ந்து 30ரூபாயில் அடங்கி விடும்.)
அடுத்த படையெடுப்பு ஸ்பென்சர் கட்டிடம். அங்கே போய் இருக்கும் கடைகளைப்
பார்த்துவிட்டு ஒன்றும் வாங்காமல்---எல்லாம் பட்ஜெடுக்கு மேல் இருக்கும்.
அடுத்து நடந்து ஹிக்கின்பாதம்ஸ் வருவோம்.
நடுவில் கொறிக்க ஏதாவது உண்டு.
ஹிக்கின்ஸில் குழந்தைகள் பக்கம் இப்போது போலவே நல்ல புத்தகங்கள் இருக்கும்.
ஒன்றொன்றாகப் படித்து விட்டு கடைசியில் ஒரு மனதாக
லேடிபேர்ட் புஸ்தகம் ஓன்றும் (5ரூ) டின் டின் புஸ்தகம்(18ரூ) ஒன்றும் வாங்கி வருவோம்.
ஸ்பெசல் டிரீட் ஆட்டொவில் வீடு வருவதுதான்.
பிறகு வீடே கலகலப்பாகி விடும். முதலில் பெரிய பாட்டியிடம் வாங்கி வந்த பொருட்களைக் காண்பிக்க வேண்டும்.
பிறகு  ஆங்கிலம்  கற்றுத் தேர்ந்த சின்னப் பாட்டியிடம் சொல்ல வேண்டும்.
இருவரும் அவசியமான கேள்விகளைக் கேட்டு இவர்கள் மூவரும் பதில் சொன்ன பிறகுதான் படிக்கும் படலம்.
இதுபோல் சேர்ந்த புத்தகங்கள் பொக்கிஷங்கள்.
இவைகளைத் தவிர லெண்டிங் லைபிரரிப் புத்தகங்கள் மிஸ்டீரியசாகக் காணமல் போகும்.
டுயூ டேட் முடிந்து பள்ளிக்கூடம் திறந்த பிறகு, நான்  தானெ
இருப்பதை திருப்பி கொடுக்கப் போக வேண்டும்!

எங்க வீட்டு மூன்று தலை முறைக்கும் நாந்தான் லைபிரரி உமன். பெரிய பாட்டியோட வடுவூர் துரைசாமி,
மாமியாருடைய லக்ஷ்மி,தேவன், கல்கி புத்தகங்கள்,
என்னுடைய சிவசங்கரி,சுஜாதா, பி வி ஆர், சாவி
இதற்குப்பிறகு பசங்களோட புக்ஸ்.
இப்பவும் சொல்லுவார் அந்த லைபிரரி ஓனர்.
105 ருபா புஸ்தகம் வரவே இல்லைம்மா என்று.
நான் என்ன சொல்லுவேன்? புத்தகங்கள் பைண்டு செய்து ஸமத்தாக அலமாரியில் இருக்கிறது என்றா?
அதற்குப் பிறகு அவர் கடைக்கே நிறைய புத்தகங்களை
சும்மாவாகவே கொடுத்து சரி பண்ணி விட்டது.
அதுவும் இந்த மாதிரி புத்தகங்கள்,
லியான் யுரிஸ்,
ஹரால்ட்ராபின்ஸ்,
மரியோ பூசோ,
இர்விங் வாலஸ்,
ஆர்தர் ஹைலி,
இயன் fஃலெமிங்,
மேலும் சிலருடைய புத்தகங்களை கிலொ கண்க்ில் கொடுக்க வேண்டி வந்தது. அறிவு தானம் நல்லதுதானே1
அதனாலே பரவாயில்லை என்று நாங்களே சமாதனப்படுத்திக் கொண்டோம்.

வலையில் பதிவு மதுமிதா ஆராய்ச்சிக்காக

பெயர்----ஏழிசை நரஹரி*  (அச்சோ பாவம்)  5/24/2006
பதிவின் பெயர்----பொருனைக்கரையிலெ
பதிவு யுஆர்எல்--www.porunaikaraiyile.blogspot.com
மற்ற பதிவுகள்---www.naachiyaar.blogspot.com
---------------------------www.kurungudi-valli.blogspot.com(english)
பதிவு ஆரம்பித்த நாள்-----ஜனவரி 2006

பதிவு ஆரம்பிக்க உதவி------மற்ற பதிவுகளைப் படித்ததால்
தோன்றிய என்னுடைய எண்ணம், மற்றும் எழுத வேண்டும் என்ற ஆர்வம்.
இருக்கும் இடம்----------சென்னை, இந்தியா.
புனை பெயர்கள்-----------மனு,வல்லி.
எழுதும்போது கிடைத்தது---நல்ல நண்பர்கள்
மேலும் எதிர்பார்ப்பது.........நல்ல நட்பு வட்டம்
சாதிக்க நினைப்பது நிறைய பொருள் பொருந்திய எழுததுக்கள்
http://www.blogger.com/post-edit.g?blogID=21983712&postID=114846876869130724

Tuesday, September 30, 2014

கனவுத்தொழிற்சாலை மந்திரவாதிகள் 15/6/2006

இப்பொழுது என்னை விட்டுப் போகாதே பாடல் தேவ் ஆனந்த்
அன்னை என்பவள்   நீதானா  பானுமதி.
போகும் முன் உன்னை உற்று உற்றுப் பார்க்கிறேன் ஏனென்றே தெரியவில்லை ஜக்கம்மா.
சிங்கம் 13 தடவை பார்த்த படம்.
என்னுடைய     ரோல் மாடல் எல்லாவிதத்திலும்.
இந்த ஒருநாளை நானும் நீயும் ஒரு ஹாலிடேயாகக் கொண்டாடலாமே
நீங்க திரும்பி வந்தாச்சா மிஸ்.
அனைவரையும் பாடவைத்த  சௌண்ட் ஆஃப்  மியூசிக்
ஃப்ரொஃபெஸ்ஸர் ஹிக்கின்ஸுக்கு சவால் விடுத்து  கடைசியில் இருவரும் இணைந்த கதை.
ஆடிரி ஹெப்பர்ன்,கிரிகரி பெக்கின் 'ரோமன் ஹாலிடே' எத்தனையோ இதயங்களைத் தவிக்க வைத்தது.
இந்த மான் விழி சில சமயம் இவருக்கு பாம்பி என்ற மானை நினைவுக்குக் கொண்டு வருவதாகச் சொன்னவர்கள் ஏராளம்.இன்னும் இவர்களொடு ஏகப்பட்ட மந்திரவாதிகளால் கட்டுண்ட காலம்  நிறைய.   இப்பொழுது கொஞ்சம் அந்த உணர்ச்சிகளிலிருந்து விலகி வந்திருக்கிறேன்.  காலம் மாறிக், கனவுகள் மாறும்போது அவைகளில் நினைவுகளில் சேமிக்க வேண்டிய கட்டாயம் வருகிறது.

Saturday, September 27, 2014

,முதுமை எப்போது ஆரம்பமா.ஆரம்பித்துவிட்டது.

முதுமை எப்போதுமெ இனிமை.  ஜூலை 29


குழந்தைகளுக்கு , சீக்கிரமே  பெரியவர்களாகிவிட்டால் படிக்க வேன்டாமே என்று தோன்றும்.

வேலைப் பளு தாங்க முடியாமல் பொருமும் 40 வயது அம்மாக்களும், அலுவலகத்து அடிமைத்தனத்தின் எல்லையில் நின்று வி.ஆர்.எஸ் வாங்க நினைக்கும் இன்னும் பிற சிலருக்கும் முதுமை ஒரு வரம்.

தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும் தங்கள் அம்மா அப்பா எத்தனை வயது வரை வாழ்ந்தார்கள் என்ற நினைவு ஓடும்.


அந்தக் காலத்தில் தங்கள் மாமியார் மாமனார் தங்களை நடத்திய விதம்(நல்லதும், கெட்டதும்) ஞாபகம் வருதெ ரேஞ்சில் ஓடும்

. மனைவிகள் சிந்தனை,
மணநாட்கள், தங்கள் தந்தையர் அனுபவித்த பொருளாதாரத் தொந்தரவு, தாயார்கள் சொன்ன வார்த்தைகள் , மாமியார் வீட்டில் முதல் நாள்,முதல் சாப்பாடு(?) நம்மைக் கண்டுகொண்டவர்கள், தோழமை பேசினவர்கள், சரியான மொஃபஸ்ஸ்ல் என்று வர்ணித்தவர்கள் இந்த மாதிரி நல்லதும் பொல்லாததும் நினைவுக்கு வரும்.


கணவர்களோ மாமனாரிடம் உரிமை கொண்டாடிய விதம்,
மச்சினர்கள் அருமை, இல்லையானால் கடி,அறுவை ,
புது மனைவியை நெருங்க விடாமல் கொட்டம் அடித்த வானரங்கள், மனைவியின் மற்ற சொந்தங்கள் தன்னை மிருகக்காட்சியில் புதிதாக வந்த பணம் பறிக்கும் ஜந்து போல பார்த்தது. அலட்டிக் கொண்டது, இவைகள் ஞாபகம் வரும்.


குழந்தைகள்,படிப்பு,வேலை,இன்ஷுரன்சு,கார் வாங்கிய,கடன் வாங்கிய, இத்தியாதி இத்தியாதி நினைவுகளும் வரும் என்று நினைக்கிறேன்.

இது :-)) நமக்குத் தெரியாத டாபிக்."-))

இவை ஓயும் நேரம் முதுமை நம்மை நெருங்கி விட்டதா என்று யாரும் யோசிப்பதில்லை.
பெண்ணுக்குப் பையன் தேடும் போதும், பையனுக்குப் பெண் தேடும் படலம் ஆரம்பிக்கும்பொதும் ஒரு நூதனமான சங்கடம் வரும். என்ன தெரியுமா?



நாம இத்தனை நாள் வரை இருந்த சோ அண்ட் சோ நிலைமை மாறி, பொண்ணோட அம்மா, அப்பா ஆகும்போதும், இல்லை பையனோட அம்மா, அப்பாவாகத் தெரியும்போதும், "அதோ வராளே "ஆறு கஜப் பச்சை புடவை அவதான் நம்ம ஜில்லுக்கு மாமியாராம்." வரச்சேயே வாசனை பார்த்தியா. எல்லாம் ஃபாரீன். நம்மாத்து மாப்பிள்ளை சம்பாத்தியம் இப்ப்டித்தான் போரது போல" என்ற பேச்சைக் கேட்க நேரிடும்.

இல்லாவிட்டால்(நம்) பெண் போட்டோ,ஜாதகம் இவற்றோடு வரப்போகும் (வருவது வராதது அப்புறம் தான் தெரியும்) சம்பந்தி வீட்டுக்கு ஒரு தளர்ந்த, எதிலேயுமெ ஃfஃஒகஸ் பண்ணாத பார்வையோடு அங்கே இருக்கும் எல்லோருக்கும் (ஸப்ஜாடா) வணக்கம் சொல்லி,

பழங்கள்,பூக்கள் எல்லாவற்றையும் வைத்து விட்டு ஒட்டியும் ஒட்டாமலும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, நிமிரும்போது ஒரு கேள்வி பாயும். 'நீங்கள் எல்லாம் ரொம்ப மாடர்ன் போலத் தெரியறதே.'

"ஏன்னால் எங்க பக்கம் 9 கஜம் புடவை தான் ,எல்லோரும்". சுத்தி முத்திப் பார்த்தால் சில 6கஜம், சல்வார் காட்சிக்கு வந்து போகும். கேள்வி கேட்டவர் யோசிப்பது என்ன என்று அர்த்தம் புரியாது,
இது மட்டும் இல்லை
,
நம்ம பையனுக்காகப் (பெண் பார்க்கப்) போகும்போதும்,
நிறைய சோதனைகள் வரும்.

அப்போது புரியும் ஒன்று, நாம் ஏற்கனவெ செகண்டரி சிடிசன் ஆயாச்சுனு.... அவர்களுக்கு நம் பையன் தான் முக்கியம்.

கல்யாணம் வரை கொஞசம் வால்(இருந்தால்) அசைத்துப் பார்க்கலாம்.. பெண் வீட்டு மனிதர்களுக்கு நாம் மனித வேடம் போட்ட பூதம். 'ஐய்யோ பையனோட அப்பா எவ்வளவோ தேவலை.' இது இருக்கு பாரு, ....(என்னோட திசையில் எல்லோரும் பார்த்த வண்ணம் இருப்பார்கள்") .


நாம் அப்போது அப்ப்ரூவல் வாங்கக் காத்திருக்கும் ,அதான் எத்தனையோ இடங்களில் காத்து இருக்கோமெ, காலேஜ் வாசல், ஸ்கூல் வாசல் இத்தியாதி அதுபோல்,

உலகத்தில இருக்கிற நல்லதையெல்லாம் முகத்தில் சேர்த்துக் கருணைக் காமாட்சியாகக் காட்சி கொடுத்தாலும் ம்ம்ம்ஹூம், ஒண்ணும் தேறாது.
பிராண்டட்..!....------- மாமியார்.
அதனால் இவள் இப்படித்தான். லேபல் ஒட்டாத குறை.
சரி இப்போ பழைய கேள்விக்குப் போவோம். நீங்கள் எல்லாம் மாடர்னா? என்று கேட்ட அம்மாவின் தொனி எனக்குப் புரியவில்லை. என் குறைந்த வெட்டுண்ட தலைமுடி தான் கவனத்தை இழுத்து அந்த மாதிரி பேச வைத்தது என்று. பிறகுதான் தெரிய வந்தது. அதற்காக நான் சவுரியோ, நீண்ட கூந்தல் தைலமோ பாவிப்பதாக இல்லை. அது அந்த அம்மாவுக்குத் தெரியாதே.


இந்த மாதிரி என் கணவருக்கும் சில பல கேள்விக்கணைகள் ,
சார் எப்பவுமே பாண்ட் தானோ. என்னதான் இருந்தாளும் நம்ம வேஷடி அங்கவஸ்திரம் மாதிரி ஒரு டிக்னிடி இந்த மாடர்ன் டிரெஸ்ல வரலை சார்.
இந்த மாதிரிக்கேள்விகள் , வயதானவராகத் தோற்றம் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினாலும், எப்படியோ தப்பி இப்போது நிஜமாகவே வயதான (கொஞ்சமே கொஞ்சம் ஒரு 10%) அப்பியரன்ஸ் கொடுக்கிறோம்.


ஆதலினால் நாமெல்லாம் செய்ய வேண்டியது என்ன வென்றால் (ப்ளாக் சின்னப் பசங்களை சொல்ல வில்லை,)


55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான்.
கூடு மான மட்டும் சீக்கிரமே ஆன்மீகப் பாதையில் செலுத்தி,ஹிண்டு க்ராஸ்வேர்ட் போட்டு,
சபாவில் மெம்பராகித்,


தவறாமல் டை (தலை) போட்டுக் கொண்டு ,
சிகாகோ,எல்.ஏ, இல்லினாய், ஓஹையோ,கிலீவ்லாண்ட் சாஃfட்வேர், விசா பிரச்சினை,அரோரா ,பிட்ஸ்பர்க்,கோவில்,மாப்பிள்ளை (இல்லாட்ட) பையன் இரண்டு கார் வைத்து இருப்பது, பெரிய வீடு வாங்கி கிரிஹப்பிரவேசம் செய்தது,
என்று பேச ஆரம்பித்தால் முதுமை பக்கத்தில் கோலாகலமாக வருகிறது என்று பொருள். வரணும். !!!!!!இல்லாவிட்டால் யார் விட்டார்கள்/

'அய்யோ பாவம் நமம ஜில்லு மாமியார் கொஞ்சம் பாரியா இருக்கார் இல்லியா, அதனாலே அடிக்கடி தொப் தொப் (நான் விழும்போது இந்தச்சத்தம் கேட்ட நினைவில்லை) என்று விழுந்து விடுகிறாராம். ம்ம் இந்தப் பொண்ணு தான் எல்லாம் கவனிச்சுக்கிறதுனு சொல்லும்போது எனக்கு சீக்கிரமே வயசாகிவிடும் என்றுதான் தோன்றுகிரது.

'இது சொந்தக் கதை இல்லை.'
இப்படி சொன்னால் டிஸ்கி என்று அர்த்தமா?
அப்படியே சொல்கிறேன். இது கற்பனை.
அப்படி இப்படி போயி,, எப்படி? ஆரம்பித்த இடத்திற்கே வந்து விட்டேனா?

Friday, September 26, 2014

எங்க வீட்டு லைப்ரரி

எங்க வீடும் புத்தகங்களும் பிரிக்க முடியாதவை.
அந்த விஷயத்தில் நாங்கள் ரொம்ப ஒற்றுமை.
எல்லோருடைய சுவைகள் வேறுபடும்.

ஆனால் புத்தகக் கடையில் நுழைந்தால்
அவரவருக்கு பிடித்த பகுதியில்,

நாங்கள் தொலைந்து போய், ஒன்று சேருவோம்.
இப்போது மகன்களும் மகளும் மணமுடித்து வேறு வேறு இடங்களில் இருக்கிறார்கள்.

ஆரம்பித்த பாடநிலைப் புத்தகங்களிருந்து,வயது வாரியாகப் புத்தகங்கள்.

என் இலாகா---, பக்தி,புராணம்,சமையல்,கலை,சினிமா
பிடித்த எழுத்தாளர்களுடைய நாவல்கள்.
முதலில் நம்ம லைபிரரி பார்க்கலாமா?

எழுத்தாளர்கள், புத்தகங்கள்.



கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின்
அமரதாரா,
அலை ஒசை
கல்கி களஞ்சியம்,
கல்கி எழுதிய கடிதங்கள்,
வீணை பவானி,
கள்வனின் காதலி,
இன்னும் பல.

தி.ஜானகிராமன் அவர்களின்,
மோகமுள்,
அம்மா வந்தாள்,
அமிர்தம்,
கொட்டுமேளம்,
உயிர்,
சிவப்பு ரிக்சா,
பிடி கருணை,
மரப்பசு, செம்பருத்தி, அன்பே ஆருயிரே
அடி ..... இன்னும் சில.
பிடித்த பக்கங்கள் பல.
அதில் சில வரிகள் 'அத்துவின் முடிவு ' என்னும் கதையில்...
file:////ஐயா என்று யாரவது வாசலில் கூப்பிட்டால், யார் என்று அவள் கேட்டுக்கொண்டு வரும்போது திகைத்துத்தான் போவார்கள்.
பளீர் என்ற சிகப்பு,
கருகரு என்ற சிற்றலையிட்ட கூந்தல்,
கறுப்புப் பட்டுப் புடவை,
மத்தாப்பூவாகப் பூரிக்கும் தோடு//
அப்பாடி !!அந்த அம்மாவே வர மாதிரி அவர் எழுத்தோவியம் காண்பிக்கும்.
பிறகு
கல்கி சார் கதைகள்,
அகிலன் அவர்கள் கதைகள்,
வேங்கையின் மைந்தன், வாழ்வு எங்கே/
கல்கி,கலைமகளில் வந்த தொடர்கள்,.

கயல்விழி,வானதி,பொன்னன்,பொன்னி
சிவகாமி, நரசிம்ம பல்லவன் இவர்களுக்காகத் தூங்காமல் யோசித்து இருந்த நாட்கள்.



சிவகாமிக்காக அழுத நாட்கள்.
டி.கே.சி அவர்கள்,ராஜாஜி ,கல்கி,சிறு பெண் ஆனந்தி பரிமாறிக்கொண்ட தகவல்கள்.
அலை ஓசை படித்து நமக்கும் அந்த மாதிரி காதில் விழுகிறதோ ஒலி என்று திகைத்த நாட்கள்.
மஹேந்திர பல்லவ அரசனின் சிவனடியார் வேஷம்,
நாகநந்தியின் கொடூரக் கண்கள்,சிவகாமியின் குளம்,
மணியன் சாரின் கைவண்ணம் ஒன்றுமே மறக்கமுடியாது.
அதுபோல் சுஜாதா சாரின் புத்தகங்கள்.
அவரின் எல்லா நாவல்களும் இல்லாவிட்டாலும்
முக்கால் சதவிகிதம் இருக்கின்றன,.அதுக்குத் தனிப்பதிவு தேவை. எல்லாவற்றிலும் ஒன்றிவிடுவதால் அந்தப் பாதிப்பிலிருந்து விடுபடுவது ப்ரம்மப் ப்ரயத்தனம்.
அப்புறம் நம்ம ராசநாராயண ஐயா.
ஒரு ஒரு பக்கமாக்ப் படிக்க வேண்டிய அரிய எழுத்துக்கள்.
மனசிலிருந்து வார்த்தைகள் பேசும் மொழிபோல் பொய்யில்லாமல் வரவேண்டும் என்று அய்யா சொல்லுவர்.
எதுக்கம்மா நாடகத் தமிழ்? இயல்பா எப்படி பேசுறீங்களொ அப்படியே எழுதணும். அப்போதான் அது படிப்பவருக்குப் போய்ச்சேரும் என்பார்.
அவர் எழுதின " கட்டுரைகளில்' இருந்து ஒரு பக்கம்.
மழை பற்றிய சொற்கள்.
1,ஊசித் தூற்றல்
2சார மழை(ஊதல் காற்றோடு பெய்யும் நுண்ணிய மழை)
3 சாரல்
4தூறல்(தூத்தல்)
5பூந்தூறல்
6,பொசும்பல்
7எறிதூரல்(பொடிக்கற்களால் மேலே எறிவது போன்ற தூறல்)
8தூவானம்,
9பொடிதூறல்,
10, ரவைத்தூறல்
11, எறசல்
12,பறவல் மழை
13பருவட்டு மழை,(,மேலெழுந்த வாரியாகப் பெய்வது)
14அரண்ட பருவம்( கண்டும் காணாம, தேவைக்குக்காணாத மழை)
15,மழை
16,துணை மழை --முதல் மழையைத் தொடர்ந்து மறுனாளோ அதர்கு அடுத்த நாளோ பெய்வது.
துணை மழை இல்லாவிட்டால் நிறைவு தராது. சாப்பாட்டின் போது இரண்டாம் தடவை சோறு வாங்கிக்கொள்ளுவது போல.//
எளிமையாக எல்லோருக்கும் பிடிக்கும் , அப்படியே அணைத்துக் கொள்ளும் எழுத்துக்கள்.
நகைச்சுவை எங்கும் பரவிக் கிடக்கும்.
அதற்குப்பிறகு
எஸ்.ஏ.பி சார்,
அவருடைய சின்னம்மா,இன்றே இங்கே இப்போதே
நான் மனத்தில் பதித்த நூல்கள்.
பிறகு , நாங்கள் எல்லோரும் படிக்க விரும்பியது,
மணியன், சேவற்கொடியோன், கொத்தமங்கலம் சுப்பு-கலைமணி.
இவர்கள் எல்லோரும் ஆனந்த விகடன் மூலம் எங்களைக் கட்டிப்போட்டவர்கள்.
இதய வீணை,
காதலித்தால் போதுமா--ரொமான்ஸை எங்களுக்கு அறிமுகப் படுத்தியவை.
தொடர்ந்து சேவற்கொடியோனின் உன் கண்னில் நீர்வழிந்தால் 19 64 வருடத்தின் இதயத்துடிப்பாக இருந்தது.
சுப்பு சார் கலைக்களஞ்சியம்.
நாவல்கள், கவிதைகள்,நாட்டுப்பாடல்கள், கட்டுரைகள், தொடர்கதைகள், சினிமா ,நடிப்பு என்று அவர் தொடாத துறையே கிடையாது.
பந்தநல்லூர் பாமா, தில்லானா மோகனாம்பாள்,ராவ் பகதூர் சிங்காரம் இவர்கள் எல்லொரும் எங்களோடு உலவிய காலங்கள் கிராமம்,வயல்,வரப்பு,இசை,நாட்டியம்,சதி,சூழ்ச்சி,சிருங்காரம்
எல்லை மீறிய மகிழ்ச்சி என்று மாறி மாறி எங்களை ஆட்டிப்படைத்தவர்.
அவருடைய செங்கமலம்,மோஹனா,எல்லோருமுயிரோடு உலவ உதவி செய்தவர் கோபுலு சார்.
சண்முகத்தின் அளகபாரம்,வண்டிமாடுகளின் துள்ளல்,மோஹனாவின் சுட்டும் நீண்ட விழிகள்.வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது என்று வாக்கியம் உண்டு.
அது கோபுலுவின் ஓவியங்களுக்குத் தான் பொருந்தும்..

அதையும் எழுத மிக நீண்ட பதிவு தேவை அசோகமித்திரன் சார் கதைகளுக்கும் அப்படித்தான். தேவன்,லக்ஷ்மி, ராஜம் கிருஷ்ணனின் மலர்கள்,
எஸ்.வி.ஏஸ் அவர்களின் நகைச்சுவை கட்டுரைகள்.
வல்லிக்கண்னன், தமயந்தி,அருள்மொழிவர்மன்,
மும்தாஜ் யாசீன்,படுதலம் சுகுமாரன்,சுந்தர பாகவதர்,இவர்கள் புத்தகங்களும் உண்டு என் அலமாரியில்.
இன்னும் சேர்ந்து கொண்டு இருக்கின்றன. என்னுடைய (இன்னும் முற்றிய) முதுமை காலத்திற்காக சேர்க்கும் சொத்து.
கண்கள் நன்றாகத் தெரியவேண்டும்.

கீழே வரும் எழுத்தாளர்களும் அவர்கள் புத்தகங்களும்
வெவ்வேறு விதமான சுவையில் இலக்கணம்
பிறழாத தமிழில், எழுதி எப்போதாவது இவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமே என்று மனசார நினைக்க வைத்தவர்கள்.

பி.வீ ஆர்.
மாயாவி,
வி.ச.காண்டேகர்,கி.வா.ஜ
என்று கலைமகள் இதழில் வெளியான கதைகள்.
ஆர். சூடாமணியின் நாவல்கள்.
மனதுக்குப் பிடித்தவள்.... என்று ஒரு தொடர்.
இன்னும் மிச்சம் இருப்பவை ஆன்மீகப் புத்தகங்கள் .
முக்கூர் ெழுதிய குறையொன்றும் இல்லை -6 பாகங்களாக வந்தவை.
இராகவேந்திர மகிமை அம்மன் சத்தியநாதன் அவர்களால் எழுதப் பட்டது. அல்லல் படும் நேரம் இவைகளைப் படிப்பேன். மற்ற நேரமும் தான்"-))
அதே போல் இராமாயண, மஹாபாரதம்,பாகவதம்
திவயதேசங்கள் , ஸ்தல புராணங்கள் எண்று நிறைய
இருக்கின்றன.
படிப்பது என்னும் வழக்க்ம குறைந்தது,
பிளாகிங் ஆரம்பிததும் தான்.
நெட்டில் தான் படிக்கிறேனே,, என்று நானே சமாதானப்படுத்திக் கொள்வேன்.
பொறுமையாக இந்தப் பதிவை வாசித்தவர்களுக்கு நன்றி.
பதிக்க சொன்ன சிவபாலனுக்கும் சேர்த்துதான்.
ஆங்கிலம் என்று பார்த்தால்
வீட்டில் இருந்து லஸ் கார்னருக்குப் போனவைகள்
1, Perry mason,
James hadley chase,
Alistair maclean,
Ian Fleming
Mills and boon,
Harvey comics--
Arthur Hailey
Irving wallace,
Robert Ludlum,
Clive Cussler,
Louis Lamour
Frederic Forsythe,
Desmond Bagley
Leon Uris
mostly light reading variety.
மீண்டும் நன்றி. 
சொற்பிழை பொறுத்துக்கோள்ளவேண்டும்.

Friday, July 28, 2006

சேது,பாம்பன்,தனுஷ்கோடி -2






ராமேச்வரம் எக்ஸ்ப்ரஸ் ராமனாதபுரத்தை விட்டுக் கிளம்பியதுமே
ரயில் பாதையை மணலும் புதர் மற்றும் முட்கள் சூழ்ந்த பரப்பு கண்ணில்பட ஆரமபித்தது.
முற்றும் புதிதான பயணம்.
உச்சிப்புளி என்று ஒரு ஸ்டேஷன்.
பின் தங்கச்சி மடம்
அதன் பின் பாம்பன்.
என் அப்பா முதலிலேயே சொல்லி வைத்து இருந்த்தால் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கடலும் பாலமும் வந்துவிட்டன.
காற்றோ ஆக்ரோஷமாக வீசுகிறது.
ரயிலுக்கு இரண்டுபக்கமும் கடல். அடியெ பாலத்தின் தூண்களில் மோதும் அலைகள்.
மெதுவாகப் போன ரயில் நின்றது அப்போதுதான் cantilever bridge என்று சொல்லப்படும் அந்த பாலத்தின் நடுவே இருந்த தண்டவாளங்கள் உயர்ந்து ஒரு வியாபாரக்கப்பல் சென்றது.
மூச்சு விடக்கூடத்தோன்றாமல் பார்த்தொம்.
பின்னாட்களில் வேறு எத்தனையோ அன்னிய நாடுகளில்
வித விதமான அதிசயங்களைப் பார்த்தாலும்,
அப்போது பார்த்த அந்தக் கடலும்,ரயிலும்,கப்பலும் இன்னும் எனக்கு ஆனந்தத்தைத் தருகின்றன.
ராமேச்வரமும் வந்தது. குதிரை வண்டியில் ஏறி,
போஸ்ட்மாஸ்டர்(எங்கள் அப்பா) வீட்டுக்கு வந்தொம்.
ராமெச்வரம் வீடுகள் வீதியில் ஆரம்பித்து அடுத்த வீதியில்
முடிந்தன.வீட்டிற்குள் நுழைய 7,8 படிகள் ஏறி உள்ளே போனொம்.
மஹா பழைய வீடு. இருட்டு,கொஞ்சம் வெளிச்சம் வந்தது மேலே இருக்கும் ஜன்னல்கள் வழியாகத்தான்.
அம்மாவின் சமையலறை விறகு அடுப்பு ,கரி அடுப்பு எல்லாம் சுத்தமாக இயங்கிக் கொண்டு இருந்தன.
காஸ் வராத நாள்.
கெரசினும் ரயிலில் வந்தால் உண்டு. முக்கால்வாசி வராது.
புதுவிதமான குடித்தனம் செய்து கொண்டிருந்தார் எங்காள் அம்மா.
புதிதாக வரும் காய்கறிகள் பற்றியும், வாசலில் உட்கார்ந்தால் வித விதமான மனிதர்களின் போக்குவரத்து தன்னை எப்போதும் , ஒருபுதிய உலகக்
கற்பனையைத் தூண்டும்படி இருப்பதாகவும் சொன்னார்..எல்லாவற்றையும் பாசிடிவாகப் பார்க்கும் உயர் மனம் அவளுடையது
சின்ன தம்பி அப்போது பள்ளி இறுதி வகுப்பில் இருந்தான்.
அவ்னுக்கும் ஓயாதவேலை. சந்தோஷமாக இருந்தான். வரும் வீ.ஐ.பி நபர்களை ராமெஸ்வரத்தை சுற்றிக் கான்பிப்பான்.
எத்தனை தீர்த்தங்கள் உண்டோ அத்தனை இடங்களுக்கும் அழைத்துப் போவான்.
சங்கு, சோழி, பவளப்பாறை, கோரலால் ஆன கைப்பொருட்கள்.
எல்லாம் எங்கே குறைந்த விலையில் வாங்கலாம் என்று தெரியும் அவனுக்கு.
அவனுடன் தனுஷ்கோடி வரை போய் வந்தோம்.
1967இல் இப்போது போல் அவ்வளவு வசதி கிடையாது. நடந்துதான் போனோம்.
ராமர் கோவில் குருக்கள் மட்டுமே போய் வரும் நாட்கள்
அவை.
நாங்கள் மீண்டும் 2003 இல் மதுரையிலிருந்து காரில் பயணம் செய்தோம்.
தேவிப்பட்டினம், சேது ஸ்னானம், முடித்து அதே பாலம் வழியாக ஆனால் தரை மார்க்கமாக அந்தப் பாலத்தை வேறு கோணத்தில் பார்த்தபடி.
பழய நினைவுகளை அசை போட்டபடி....
இப்போது அதே தம்பி பெரிய வேலைக்கு வந்து விட்டதால் . தனி காட்டெஜ், கொடுக்கப் பட்டது
அதெ போல் கடைகளில்
தெரிந்த மனிதர்கள்.எலோருக்கும் வயதாகி விட்டது.
கந்தமாதனபர்வத்தில் இருக்கும் அர்ச்சகரிடம் இவன் கேட்கிறான்"சாருக்கு என்னைத் தெரிகிறதா?' என்று. அவரும் அட போஸ்ட்மாஸ்டர் வீட்டுப் பையனில்லை!!! என்ரு ஆச்சரியப் படுகிறார்.
தன் மகனும் என் தம்பியும் புயல் வந்த போது செய்த சமூக
சேவையை சொல்கிறார். இன்னும் சில நண்பர்களைப் பார்க்க முயற்சி செய்து விட்டு சிலரைப் பார்த்து முப்பத்து நான்கு வருடக் கதைகளைப் பேசிக் கோவிலுக்கும் வருகிறொம்.
ராமேஸ்வரம் மாறியது தெரிகிறது.
புது விதமான நடை உடை பாவனைகளொடு இருக்கும் அண்டை நாட்டுத் தமிழர்களின் நட்பைப் பார்க்க முடிந்தது.
அழகான குடிசைகள், அதன் வாசல்களில் கோலங்கள்
சுத்தமான சூழ்னிலையை விரும்பும் அவர்களது பான்மை
கண்கூடாகத் தெரிகிறது.
நேபாலோ, சிக்கிமோ ஏதோ ஒரு நாட்டிலிருந்து வந்தவர்களுக்கும் ராமேஸ்வரம் அடைக்கலம் கொடுத்து இருக்கிறது.
கேரளா சர்க்கஸ் ஒன்று கூடாரம் அடித்துக் கொண்டு இருந்தது.
அங்கே ஒரு திடலில் சிவாஜியின் கௌவுரவம் படம் கூட ஓடிக் கோண்டு இருந்தது.
புயலின் சாயல் அழியாமல் தங்கி விட்ட பூமியாகத் தனுஷ்கோடி.
மறைந்து மறைந்து ஓடி வரும் சிறிய தண்டவாளங்கள்.
பச்சை மரகதமாக ஒரு கடல்.
பழுப்பு நிறமாக இன்னோரு கடல்.
காலம் மாற்றாத வெண்மணல்.,, சிப்பிகள் ஆயிரக்கணக்கில்.
நமது ஜனாதிபதியின் எளிய வீடு., சேது பாலத்தைக் காண்பிப்பதாகக் கூவும் படகுக்காரர்கள்.
எல்லாமே இருக்கின்றன . கூடவே சமய சொற்பொழிவுகளும் அறைகூவி அழைத்தவண்ணம் இருந்தன.
நம் இந்தியா இங்கே இருக்கிறது என்ற நினைப்புடன் திரும்பினோம்.



Sunday, July 09, 2006

மென்மைப் பூக்கள்





பெண்மையும் மென்மையும் ஒன்றா/?
பெண்களைக் கடினமாக்குவது எது? வாக்குவாதம் செய்யும்,எதிர்த்துப் பேசும், சண்டைபோடக் காத்திருக்கும்
ஜீவன்களாக மாறுவது எப்போது?
நல்லது சொல்ல வருபவர்களைக்கூட
அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் சிந்தையை மறைப்பது எது?
யோசிக்கும்போது வாழ்க்கையில் அவர்கள் தொடர்ந்து பெறும் அனுபவங்களே அவர்களை மாற்றுப் பாதையில் மனம் போக வைக்கின்றன என்றுதான்
எண்ணம் வருகிறது.
யாருமே பிறக்கும்போது மனசில் கறுவிக் கொண்டு பிறப்பதில்லை.


இதமான தென்றலாகத்தான், பூவாகத்தான் பிறக்கிறாள் பெண்.
இதெல்லாம் என் மனசில் எழுந்த எண்ணங்கள் ,எங்க வீட்டு குப்பு அம்மா(உதவிக்கு இருப்பவர்) ஒரு புது செய்தி சொல்லும் வரை.

;அம்மா, மினிம்மாவை மருமவ அடிச்சுப் புட்டாம்மா!'

'அட, என்னாச்சு, ஏதாவது பண விவகாரமா? அந்தப் பொண்ணு முழிச்சுக்கூடப் பாக்காதேனு" நான் சொல்ல
குப்பு இன்னும் அதிர்ச்சியில் இருந்தாள்.
அவளே தொடருவாள் என்று தெரியும்.
காப்பியை மட்டும் பக்கத்தில் வைத்துவிட்டு
உள்ளே வந்துவிட்டேன்.

எனக்குத் தெரிந்தவரை குப்புவின் தோழி மினிம்மாவும் வம்பு செய்யாத பழைய காலத்து மனுஷி.

அவளுக்கு வந்த மருமவளும் அதே வந்தவாசிக்
கூப்பிடு தூரக் கிராமத்திலிருந்து 15 வயசில் வந்தவள் தான். பேரு வனமல்லி.
புருஷன் தாமோதரன் மனசு அறிந்து, 2இரண்டு பெண் குழந்தைகளும் இரண்டு ஆண் பசங்களும் பிறந்து, பிறகு
கணவனுக்கு சங்கடம் வரவேண்டாம் என்று தானே குடும்பக் கட்டுப்பாடு (ஆபெரஷன்) செய்து கொண்டாள்.
நல்ல குடும்பமாக நடந்து வந்தது, தான்.

புது விருந்தாளி சிங்கப்பூரிலிருந்து வரும் வரை.
அவன்நம்ம குப்புவோட மச்சினன். கிட்டி என்கிற கிட்டிணசாமி .
நாலு வருஷம் முன்னால் எதோ ஏஜண்டுக்குப் பணம் கொடுத்து சிங்கப்பூர் போனவன்.
போகும்போது இருந்த பதவிசு இல்லை.

எனக்கு என்னமோ அவனைப் பார்த்தால் சிவாஜி பாகப்பிரிவினை படத்தில் எம்.ஆர்.ராதாவை கூப்பிடுவது போல் டேய், சிங்கப் பூரான் என்று கூப்பிடத் தோணியது.
அவன் வருவதற்கு முன்னாலே சென்ட் மணம் தூக்கியது.

எங்க பசங்க வெளில வரும்போது அவனை uneasy ஆகப் பார்த்துவிட்டு ஓடிவிட்டார்கள்

நான் பார்க்கும்போது அவன் உள்ளே வந்து சோfஃஆவிலும் உட்கார்ந்து விட்டான்,.


எனக்குக் கொஞசம் தயக்கமாக இருந்தாலும், என்னப்பா விஷயம் என்று ஆரம்பித்தேன்
சும்மதான்மா பாத்துட்டு கிப்ஃட் கொடுக்கலாமுனு வந்தேன். ''
என்றான்.
இவன? கிப்ஃடா// என்று நினைக்க
இரண்டு மூன்று பென்சில்,கலர் பென்சில் சாக்கலேட் என்றூ கொடுத்தான்.
பிறகு தன் வேலை, தன் வீடு எல்லாவற்றையும் வானளாவப் புகழ்ந்தான்.
அத்தோடு போயிருந்தால் சேதியே இல்லை.
நம்ம அய்யாவுக்குக் கூட இதை விட நல்ல வேலை கிடைக்குங்க,.
நான் டிரை செய்யரென்" என்று சொன்னதும்

எனக்கு சுரு சுரு என்று குடைய ஆரம்பித்தது.
அது கோபமாக மாறுவதற்கு முன்னால்

சமாளித்துக்க் கொண்டேன்.
"நாங்க ரொம்பவெ நல்லா இருக்கொம்பா
எங்களுக்கு அங்கெல்லாம் போக ஆசையில்லை.
நீங்க நல்லா இருங்கொனு சொல்லி அவனை ஒரு வழியாக அனுப்பினேன்.
//என்ன ஆச்சு, இந்தப் பையனுக்கு 4 வருஷம் இப்படி மாத்துமா ஒருத்தனை?? //
மாமியார் உள்ளேயிருந்து
'இடுப்பிலே நாலு காசு சேர்ந்தா வாயிலே நாலு வார்த்தை வரும்னு சொல்லிக் கொண்டே வந்தார்
.இது நடந்து நாலு நாட்களில் குப்பு வந்து சொன்ன சேதிதான், மினிம்மா
அடி வாங்கிய சேதி.

இந்த கிட்டி, மினியம்மா மகனையும் ஆசை
காட்டி நல்லபடியாக வேலைக்குப் போனவனை அழைத்துப்போய்ப்

பணம் பிடுங்கிக் கொண்டு சோமபானக் கடையிலே அம்போனு விட்டுப்போய் விட்டான்.
வீட்டிலே ஒன்றும் தெரியாது.

குப்புவுக்கும் மினிம்மாவுக்கும் இந்த விஷயம்அரசல் புரசலாகத் தெரியும். மல்லிக்குத் தெரியாது.

வேலைக்குப் போன புருஷனைக் காணொமேனு படாத பாடு பட்டுத் தேடி இருக்கிறாள்
அவளுக்குத் தெரிந்து(அந்த) தாமுக்குப் பழக்கம் ஏதும் கிடையாது.

ஏதோ நடந்தூவிட்டது என்று ஊருக்குச் சொல்லி அனுப்பி எல்லோரும் ஓடி வந்து
மினிம்மாவையும் குப்புவையும் விசாரித்ததில் உண்மை வெளிவர,
அதற்குள் போதையும் தெளிந்து, பசி காதை அடைக்க, கையில் பணமும் இல்லாமல் நடந்தே வீட்டுக்கு வந்து சேர்ந்தான் தாமு..

முதலில் அவனைப் பார்த்துவிட்டு அழுது ஓய்ந்த மல்லி,
விஷயம் தெரிந்ததும் எடுத்தாள் காளி வேஷம்.
ஆற்றாமையும், கோபமும் பசியும்
அந்தப் பசுவைப் புலியாக்கி விட்டது.

'எனக்கே தெரியாமல் என் புருஷனை இப்படி செய்து விட்டியே' என்று ஆத்திரம் தாங்காமல்
போட்டாள் ஒரு போடு மினிம்மாவின் முதுகில்.

கூட்டமே வெல வெலத்துவிட்டது.
பாய்ந்து வந்து அவளை விலக்கித் ,திட்டி கடுமையான வார்த்தைகளைப் போட ஆரம்பிக்கவும்தான் ,

அவளது ஆத்திரம் அடங்கி அழுகையோடு தன்னோட தருமரை (புருஷனை)க் கெடுக்க ஒருத்தன் வந்து அதற்குத் துணையாகப் பணமும் கொடுத்த மாமியாரை என்ன சேஞ்சால் தகும் என்று பிரலாபித்து, ஒய்ந்தாள்.

மணவாளனையும், அவனைப் பெற்றவளையும் ஒன்றாக்
உட்காரவைத்து வென்னீர் சுட வைத்து,
உடம்பு பிடித்துவிட்டு,
ஆகாரம் கொடுத்தாள்.

அப்படியே அவள் தூங்கவும் போய்விட்டாளாம்.
இவ்வளவையும் சொல்லி முடித்த குப்புவும் , பின்னால் போய் நிழலாகப் பார்த்து முந்தானைத் தரையில் விரித்து படுத்து விட்டாள் அசந்து.

எனக்கு இந்தப் புது நரசிம்ம அவதாரத்தை யோசிக்கவே முடியவில்லை.
புருஷன் பேரே சொல்ல மாட்டாள்.
அவிங்கே வந்தாங்கதான்.
அப்படிப பட்டவளுக்குத் தன் சொத்தே பறி போக இருந்தது என்னும் செய்தி ஒரு பெரிய அதிர்ச்சி.
அதுவும் தனக்குத் தெரியாமல்;
நடந்தது. தன் புருஷனை இன்னோருத்தன் ஏமாற்றினானெ என்கிற கோபம் எல்லாம் அந்த க்ஷ்ண்த்தில் அவளை ஆட வைத்து விட்டன.
அதாற்கப்பறம் வனமல்லி படு ஜாக்கிரதையாகி விட்டாள்.

க்லொபல் டிடெக்டிவ் ஏஜென்சி தான்
கூப்பிடவில்லை.

அதற்கு பதில் மத்தப் பாதுகாப்பு ஏற்பாடு எல்லாம்
செய்து விட்டாள்.

இந்த நிகழ்ச்சிதான் என்னை இந்தப் பதிவு ஆரம்பத்தை எழுத வைத்தது. இப்போ கேட்டா கூட எல்லோரும் அசடு வழிய சிரிப்பார்கள்.


Wednesday, July 05, 2006

மரணம் உதவும்--தேன்கூடு போட்டி

தேன்கூடு-போட்டி/மரணம்--5/7/2006

அவன் அதுவரை மரணத்தைப் பற்றி பயப்படாதவன். நெருப்புன்னு சொன்னா வாய் வெந்தா போகும் என்ற வாக்குவாதம் வேறு. அவன் கவலைப் பட்டதெல்லாம் எஞ்சினீயராகப் படிக்கும்மகனை அடுத்த கட்டஉயர்வாக அமெரிக்காவுக்கு அனுப்புவது எப்படி என்றுதான்.

எல்லாருக்கும் உண்டான நியாயமான ஆசைதானே.
மகனும் அப்பாவை ஏமாற்றவில்லை.
ஊர் சுத்தப் போகவில்லை. வகுப்பு "கட் " செய்யலை..எல்லாவிதமான அவசியமான துணைவகுப்புகளுக்கும் போக
அப்பா உதவி செய்தார்.
அலுவலகத்திலிருந்து இதற்காகவெ 10 மைல் தூரத்திலிருந்து,தன்னுடைய ஸ்கூட்டரில் பயணம் வந்து,அது மழை நாளோ, வெய்யில் நாளோ மகன் விரும்பும் டியூஷன் வகுப்புக்குக் கூட்டிக் கொண்டு போனான்
அதே ஸ்கூட்டரை மகன் கையில் ஒப்படைக்க அவனுக்குமனம் இல்லை.சாலைகள் சரியில்லை. மகனைப் பாதுகாக்க வேண்டும்.பசிக்கு ஏதாவது வாங்கித் தர வேண்டும். தான் போகாத உயரத்துக்கு அவனை
செல்ல வைக்க வேண்டும்

.நான் அவனைக் கேலி செய்ததுண்டு. இப்படியாவது கஷ்டப்படாவிட்டால் என்னப்பா, நம்ம சென்னை போதாதா? இங்கே இப்போதுகிடைக்காத வேலையா?ம்ஹூம்.யாராலும் அவன் மனதை மாற்ற முடியவில்லை.இதற்காகவே தான் செய்யும் வேலையில் மற்றவர்கள் போக மறுக்கும் இடங்களுக்குப் போய்,

வெற்றிகரமாக அரசாங்கப் பணிகளை முடித்து
அவார்ட்ஸ் & ரிவார்ட்ஸ் பெற்றுக்கொண்டான்.வேலை வேலை ஓயாத வேலை.விருந்துக்கோ மருந்துக்கோ நேரமில்லை.கேட்டால் அதே சிரிப்பு.

உடம்பு ஒத்துழைக்க மறுக்கும்.முதுகு கெஞ்சும், எனக்குக் கொஞ்சம் ஸ்கூட்டரிலிருந்து விடுதலை கொடு என்று.
அப்போதெல்லாம் இருக்கவே இருக்கிறது, நண்பனின் கார்.அலுவலகத்துக்கு லீவு சொன்ன நாள் கிடையாது.
இடைப்பட்ட காலத்தில் அவன் அம்மாவும் நோய்வாய்ப் பாட்டதுதான்அவனுக்கு அதிர்ச்சி.கொஞ்ச நாட்களுக்கு அன்னையும் ஆஸ்பத்திரியுமாகக் கழித்தான்.இவ்வளவுக்கும் நடுவில் அவன் அலுத்துக் கொண்டு நான் பார்த்ததே இல்லை.

இந்த ஒரு சமயத்தில் தான் அவன் வருந்தி நான் பார்த்தேன்.அழுதும் விட்டான். அம்மா என்னை விட்டுப் போய் விடுவாளா என்று.நாங்கள் நானும் அவன் அம்மாவும் சேர்ந்துஅவனை மீண்டும் சரிப்படுத்தினோம்.

மற்றபடி சிரிப்பு ,சினிமா இவைகள் அவனுக்கு மிகவும் பிடித்த ,கருவிகள் .நன்றாகப் பாடுவான்.
எங்கிருந்தோ வந்தான், பாரதிப் பாட்டு ரொம்பப் பிடிக்கும்.
அதன் முடிவில் படிக்காத மேதை படத்தில்
ரங்கராவ் அவர்கள் சிவாஜி கணேசனை நினைத்து
'ரங்கா ரங்கா ' என்று பாடுவது தனக்கு மிகப் பொருத்தம் என்பான் .
.எனக்கு முதலில் இவன் மூலம்தான்ஜோக் புத்தகம் பரிசு கிடைத்தது.. அவனிடமிருந்து கேட்டதுதான் இந்த யானை,எறும்பு,என்சைகிளைப் பிடியா. முதலான கடி வகை அறுவைகள்
சரி மரணத்துக்கும் இவனுக்கும் என்ன உறவு?அவனும் மரணமும் ஒரு இரவு சந்தித்து விட்டார்கள்.இரவு அம்மாவுக்குத் துணையாகப் படுக்கச் சென்றவன் அந்த அம்மாகால் பக்கத்திலேயே உயிரையும் கொடுத்து விட்டான்.தூக்கத்தில் உயிரையே வாங்கும் sleep apnea!
அதீதமான குறட்டை விடுகிறவர்களுக்கு சில சமயம் மூச்சு தடைபடுமாம். அப்போதேமார்படைப்பு, மரணம்.
ஒரு நல்லது நடந்தது.அவன் மகன் வெளிநாடு போனான்.அவனுக்குப் போவதற்காகவும், படிப்பதற்காகவும் அந்த பல்கலைக் கழக பண உதவியும் கிடைத்தது. இவன் ஒடி ஓடி சம்பாதித்ததற்கும் ஒரு மதிப்பு கிடைத்தது. ஒரு லட்சியம் நிறைவேறவும்அவன் மரணம் உதவியது.

Wednesday, June 28, 2006

கி.இராஜநாராயணன் அய்யா--2

அய்யாவும் போனுக்கு வந்து யார் என்று விசாரித்து விட்டு பேச ஆரம்பித்தார். அவ்வளவு எளிமையான பேச்சை நான் இதுவரை கேட்டது இல்லை.
எங்க அம்மா அப்பா ஊரு பேரு எல்லாவற்றையும் விசாரித்தவர் விவரத்தைக் கேட்டு வருத்தப்பட்டார்.
அதற்கப்புறம் அடிக்கடி கதை கேட்பதற்கே நான் போன் செய்வதும் அம்மாவும் அவரும் நடந்த நிகழ்ச்சிகளைக் கோர்வையாக சொல்வதும் மிகப் பழகிப்போன ஒன்றாகிவிட்டது.

அதன் பயன் ,அதுக்கப்புறம் நடந்த புத்தகக் கண்காட்சியில் அகரம் பதிப்பகத்தில் அய்யவுடைய நான்கு புத்தகங்களை வாங்கியதுதான்.

எல்லாவற்றையும் இன்னும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

அம்மாவும் அய்யாவும் ஒரு நாள் மதியம் போன் செய்து
அடுத்த நாள் அவர்கள் சென்னைக்கு முத்தமிழ் விழா ஒன்றில் கலந்து கொள்ள வருவதாகவும், எங்க வீட்டுக்கு அப்படியே வரலாமா என்று கேட்டதும்,
எனக்குப் பேச்சே வரவில்லை.

இவ்வளவு பெரிய ம்னிதர்களோடுப் பேசிப் பழகி இருந்தால்தானே வார்த்தைகள் அருமையாக வெளியே வரும்?

வாங்க, கட்டாயம் வரணும் எனறு சொல்லி விட்டு மறுநாள் காலையிலிருந்து காத்துக் கொண்டிருந்தோம் நானும் எங்க வீட்டுக்காரரும்..

காலையில் தொலைபேசியில் உறுதி வேறு செய்து கொண்டேன். மனசு மாறிவிடப் போகிறதே என்றூ.
வந்தார்களம்மா இருவரும் . ஒரு வழக்கமான, அம்மா அப்பா வருகை போலத்தான் இருந்தது.
கணவதி அம்மாவின் பாசம்,அய்யாவின் வீட்டை சுற்றிப் பார்க்கும் அழகு எல்லாம் எனக்கு அதிசயமாக இருந்தது.
அவர்கள் என்ன சாப்பிட்டார்களோ என்னவோ என்று விசாரித்தேன். அய்யாவுக்கு நல்ல காப்பி போதும் சக்கரை கம்மியா என்று அம்மாவும், அவளுக்கு நல்ல பால் போரும் சக்கரையே வேண்டாம் என்று அய்யாவும் சொல்லி விட்டார்கள்.
அதற்குப் பிறகு எங்க வீட்டு மீனாட்சிதான் பேச்சைத்தன் பக்கம் இழுத்துக் கொண்டது. இப்படிக்கூட தனிமையாக ஒரு பிறவி உண்டா என்று சிரிப்பு.
எல்லாவற்றிற்கும் சிரிப்புதான்.
வாங்கின புத்தகங்கள் எல்லாவற்றிலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்,. தான் பழகின சக எழுத்தாளர்கள் பற்றின சுவையான சம்பவங்களைச் சொன்னார். அம்மாவும் அப்போதைக்கப்போது கலந்து கொண்டார்கள்.
என் பிரமிப்பு நீங்கவே மேலும் ஒரு மணி நேரம் ஆனது

அவர்கள் பாண்டிக்குப் பயணம் புறப்பட வேண்டும். வீட்டுக்குப் போய் தோசை சுட வேண்டும் என்று பழகின ரொடீன் அன்றாட வாழ்க்கைக்கு வந்து விட்டார்கள்.
நானும் புத்தகங்களிருந்து கேட்க நினைத்து இருந்த ஒரு சந்தேகத்தைக் கூடக் கேட்கவில்லை.
அவர்களைப் பார்த்ததே பெரிய புண்ணியம் தான்.
அந்த இரண்டு மணி நேரமும் இரு வயது முதிர்ந்த இளமை நிறைந்த வாழ்க்கையின் ரகசியம் தெரிந்த
இரு நல்ல மனிதர்களைப் பார்த்துப் பழகியதுதான் எங்கள் வீட்டில் நிரவி இருந்தது.
எத்தனை முரண்பாடுகளை இருவரும் சந்தித்து
இருக்கிறார்கள்!!
வாழ்வின் கரடு முரடான பாதை எங்கும் பயணம் செய்து
அலுப்புக் காட்டாமல் வாழ்க்கயை ரசித்து ருசிப்பதே தலையாய கடமையாக, ஒரு தவமாக இயங்கும், யாரிடமும் தப்பையே கண்டுபிடிக்காமல் நிறைவையே காணும் இரு அற்புத மனிதர்களைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது
மீண்டும் அவர்களைப் பார்த்துப் பேசும் நாளுக்காகக் காத்து இருக்கிறோம்.
அய்யா அவர்களிடம் அவரைப் பற்றி எழுதப் போகிறேன் என்றதும் உடனே மீனாட்சியைப் பற்றிய தன் எண்ணங்களை எழுதிக் கட்டுரையை ஆரம்பிக்கலாம் என்று சிரித்துக் கொண்டெ ஐடியா கொடுத்தார்.
ஒரு நல்ல மனிதரையும் அவரது குடும்பத்தையும் அடையாளம் காண்பித்துக் கொடுத்த எங்க அம்மாவுக்கு நன்றி..

Sunday, June 25, 2006

டணால் தங்கவேலு

திரு என்.எஸ்.கே, டி.எ.மதுரம் தம்பதிகளின் சுத்தமான நகைச்சுவைக்குப் பிறகு எங்களைக் கவர்ந்தது டணால் தங்கவேலு என்று அறியப்பட்ட திரு கே.ஏ.தங்கவேலுவின் காமெடி தான்
Posted by Picasaஎங்களுக்குத் தெரிந்து அவரை நாங்கள் ரசித்தது கல்யாணப்பரிசு படத்தில்.
ஒரு ரொடீன் காமெடியாக இல்லாமல் டைரக்டர் ச்ரிதரின்
முயற்சியில் இந்தப் படத்தில்
எல்லோருமே நல்ல இயல்பான நடிப்பைத் தந்து இருந்தார்கள்.
கதையின் தொடக்கம், முடிவு எல்லா இடங்களிலும் தங்கவேலுவும் அவரது மனைவி சரோஜாவும் நிறைந்து இருந்தார்கள்.
எங்கள் எல்லோருக்கும் நகைச்சுவை டையலாக் அத்துப்படி ஆகி இருந்தது.
"நீங்கயாரு சார், நாங்க ராஜமன்னார் கம்பனி'
அண்ணாச்சீ, என்னாச்சி,உங்களை சந்திச்சு அனேக நாளாச்சினு கால்ல விழுந்தான், சிசிச்சீ, கால்ல விழாத,
வந்த வேலையை சொல்லு"
ஏதோ சம்திங்..னான்
அப்படியே அவனுக்கு ஒரு நூறு கொடுத்து வந்தேன் என்று அலட்டிக்கொள்ளும் நடிப்பு இனிமேல் பார்க்க முடியாது.
எழுத்தாளர்கள் இன்னாட்டு முதுகு எலும்புனு சொன்னேன் பார். தட்டினான்,தட்னான்.
யாரு உங்களையா?

ஆ.என்னை எப்படித் தட்டுவான், நாந்தான் மேடைலே இருந்தேனே.
அவ்வளா பெரிய கூட்டத்திலே இத்தனியூண்டு மாலையா போட்டாங்க?
ஆங்..அதை எடுத்து வரணும்னா ரெண்டு ,ரெண்டு!!லாரி வேணும்."

நல்லதொரு டூப் மாஸ்டராக வந்து நம்மை மகிழ வைப்பார்.
அதெபோல், அறிவாளி படத்தில் முத்துலட்சுமியுடன் வந்து செய்யும் அட்டகாசம், ஒரு இயற்கையான சுத்தமான
அக்மார்க் சிரிப்புக்கு பார்க்க வேண்டிய படம்.

மனைவிக்கு அறிவூட்ட, நாகரீகம் சொல்லித்தர முயல்வார்.
அதை அனாகரீகமாக சொல்லாமல் அழகாக பழக்குவார்.
முத்துலக்ஷிமியும் சளைக்காமல் ஈடு கொடுப்பார்.
அதில் ொரு வசனம் இதுபோல் வரும். "என் சினெகிதன் ஆளவந்தான் குடும்பத்தைப் பாரு. ,எல்லாரும் மூக்கு மேல விரல் வைக்கிறாங்க"

மு.லக்ஷ்மி----"இதென்ன பிரமாதம், என்னைப் பார்த்து, எங்க ஆலுங்க கூடத்தான் உஊஊனு சொல்லறாங்க"

த .. வேலு --- ஆஹா அவன் வுவுவுவ்னு ஏதாவது நாயைக் கூப்பிட்டு இருப்பான்"

அவர் நடித்த மற்றப் படங்கள், அனுபவித்துப் பார்க்க வேண்டியவை
பார்த்தால் பசி தீரும்,
பாக்கியலட்சுமி
மாயா பஜார்,
அடுத்த வீட்டுப் பெண்.
இவை எல்லாம் என் நினைவுக்கு வருகின்றன
எல்லாவற்றுக்கும் மேல் அவரது கொள்கை.

யாரையும் அழிவுச் சொற்களால். நகைச்சுவைக்காகக் கூடத் திட்ட மாட்டராம்.
தமிழில் எத்தனையோ நல்ல வார்த்தைகள் இருக்கும்போது கெட்ட கசப்பான இயற்கைக்கு மாறான சொற்களை ஏன் பயன்படுத்த வேண்டும் என்று கேட்பாராம்.
இன்ஸ்டன்ட் விட் எனப்படும் நகைச்சுவை உணர்வு அவரிடமும், அவர் மனைவியிடமும் இருந்தது.
இரண்டு பேரும் நடத்தின மேடை நாடகங்களும் நல்ல புகழைப் பெற்றன.

திரு தங்கவேலுவின் வாழ்க்கையை ப் பற்றி நம் ஊரு ப்ஃலிம் நியூஸ் ஆனந்தன் சாரிடம் தான் கேட்க வேண்டும். எங்கள் வாழ்க்கையிலும் தமிழ்மக்கள் வாழ்க்கையிலும் செம்மையான நகைச்சுவை கொடுத்த திருவாளர் டணால் தங்கவேலுவை எப்போதுமே மறக்க முடியாது.

Friday, June 23, 2006

அரோவானா மீனாக்ஷி

Posted by Picasa மீனாட்சி என்று பெயர் சூட்டிக்கொண்ட இந்த அரோவானா வகை fஃரண்ட் எங்க வீட்டுக்கு வந்து 4 வருடம் ஆகிறது. 4 இன்ச் அளவில் அவள்/அவன் வந்த போது
எனக்கு கொஞ்சம் சந்தேகம் தான்.எவ்வளவு நாள் வாழ்வோ என்று.
ஏனெனில் அப்போது எங்கள் வீட்டுக்கு திடீர் மீனயோகம் அடிக்கும் வருடம்.
மீன்கள் வரும், நீந்துவதற்குப் பதிலாக மிதக்கும்.
பிறகு பக்கத்து வீட்டுப் பூனை உணவாக ஆகிவிடும்.
இதே போல் வாள மீன் விலாங்கு மீன் த்ிர மத்த மீன் வகையறாக்கள் வருவதும்
பெல்லி அப் செய்வதும்
நாங்கள் வருத்தப் படுவதும் நடந்து வந்தது.
அக்கம்பக்கம் பசங்க எல்லாம் "யேய் மீன் வரப்போரது " 'என்று வந்து பார்ப்பதும், அச்சச்சோ இதுவும் போயிடுத்தா
எண்று உச்சுக் கொட்டுவதும் வ்க்கமாகி விட்ட வேளையிலே.... எங்க வீட்டு எஜமானருடைய(நிஜமாகவே அவர்தான் எஜமானர்) உடற்பயிற்சியாளர் இந்த அரோவானா மீனை வளர்ப்பது பற்றீ ரொம்ப சிறப்பாக எடுத்து சொன்னார்.
அடக் கடவுளே இன்னோரு ஜீவனா என்று முதலில் தோன்றினாலும் அவர் சொன்ன அடுத்த நாளெ,
இந்த ஆசாமி (நம்ம மீன்டசி)ஒரு பாலிதீன் பையில் துள்ளிக்கொண்டு வந்து விட்டார்.

என்னுடைய மீன் (வேறு மாதிரிப் பார்த்த )கண்களுக்கு(ஜாண்டிஸ் eyes... சொல்லக் கூடாது) அது பரிதவிப்பதாகத் தோன்றியது.
இந்த மீனோடு வந்த உதவியாளர், அதற்கு உணவும் கொடுத்து விட்டுப் பொவார் என்ற நினைப்பில் நாங்கள் பரமரிப்பு பற்ரிய விவரங்களைக் கேட்கும் போது தான், தெரியும், வந்திருப்பவர் (arovaana)


லைவ் fish சாப்பிடுகிறவர் என்று.
சகலசைவப் பழக்கங்களையும் பின்பற்றும் வீட்டில்
உயிரொடு வாங்கித் தொட்டியில் போட்டு அது சாப்பிடுவதை வேறு பார்க்கணுமா. ,,சரிப்படாதே என்று நான் வாயைத் திறப்பதற்குள், எ-ர் சரிப்பா நான் பாத்துக்கிறேன் என்று சொல்லி வழிஅனுப்பி வைத்தார்.
அப்போது ஆரம்பித்தது மத்ஸ்யாவதாரப் பெருமை.
உண்மையாகவே இந்த வகை மீன் டிஸ்கவரி சானலில் வந்ததாம்.
அதன் விஸ்வரூபம் 6 அடியாம்.
வளர வளரத் தொட்டி பெரிசாக வேணுமாம்.
நான் நம்பவில்லை.
எல்லாம் ஹம்பக். சும்மா மார்க்கெடிங் பேச்சு என்ற யோசனையில், முதலில் 50 பைசா மீன் இரையாகப் போடலாம்னு நினைத்து இன்னொரு மீன்கள் விற்கும் கடைக்கு( அதாவது மீன் சாப்பிடற மீன் விற்கும் கடை. நீங்கள் வேறு ஏதாவது கற்பனை செய்ய வேண்டாம்)
போனோம்.
அவனுக்கு ஒரே குஷி.
என்ன சார் அரோனாவா. ??வீட்டுக்கு வாஸ்துப்படி நல்லது சார். !
இப்படியே தினம் 10 பொடுங்க. அப்பறம் வளந்தப்புறம்
பெரிசு போடலாம் என்று ஒரு 20 கறுப்பு கலர் மோல்லி எனும் மகிழ்ச்சியாகத் தங்களுக்கு நேரப்போவதைத் தெரியாத ஆடிக் கொண்டிருந்த ஒரு இன்ச் மீன்களைக் கொண்டுவந்தோம்.
வழி முழுவதும் இதென்னடா காலம். ஒரு வேளை இந்த அரோனா போன ஜன்மத்தில் நமக்கு விருந்தாளியோ,மாமியார்,மாமனாரோ இல்லாட்ட ஹாஸ்டலில் விடப்பட்டு சாப்பாட்டுக்கு நாம ஏங்க வைத்த பிள்ளையோ என்றெல்லாம் நாடி ஜோஸ்ய ரேஞ்சில் மனசு ஓடுகிறது.
இரண்டு வாரம் முன்னால் எங்கள் வீட்டுக்கு வந்த(பொழுது போகாமல் எல்லாருடைய சர்வ நாடியையும் ஆருடம் பார்த்து ஒரு வழி பண்ணுகிறவர்) so called சினேஹிதர்
என் கையைப் பார்த்து உங்களுக்கு 4 குழந்தைகள் பிறந்து இருக்கணுமே என்று கேட்டிருந்தார்.
சும்மா கேள்வி கேட்டாலே முழிக்கும் வகை நான்.
இந்த மாதிரி வாழ்க்கையே கேள்விக்குறி மாதிரி ஒரு குண்டு போட்டார்னால்// வெலவெலத்து விட்டது.
அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையே.
எங்களூக்கு இந்த 3 குழந்தைகள் தான்.
வேற ஒண்ணூம் தெரியாதே என்று நான் அவஸ்தைப்பட
இவர் உள்ளுக்குள் சிரிப்பு வெளில சீரியஸாக வைத்துக் கொண்டு(ஜாதக ஜோசியமெல்லாம் நான் தான்) கவனிக்கிறார்.
என்னவெல்லாமொ நினைப்பு வருகிறது. ஒரு வேளை ' பழைய சினிமாக்கள் மாதிரி ஏடாகூடமாக ஏதாவது நடந்து
இருக்குமோ? இல்லையே, ஒவ்வொரு தடவையும் எல்லோரும் வரப் போகத்தானே இருந்தார்கள். இப்படி நான்
மாயமோஹினி trailer மாதிரி ரீவைண்ட் பண்ண, அவர் என் கையை இப்படித் திருப்பிப் பார்த்து ஆமாம்மா உங்களுக்கு மூன்று தான் என்று அசடு வழிந்தது,
இப்போது நினைவுக்கு வருகிரது. அதாவது feed fish வாங்கி வரும்போது.
எப்படியோ மீனும் வளர்ந்து மீனாக்ஷி என்று நாமமும் சூட்டி
நாளிரு மேனி பொழுதிரு வண்ணம் வளர்ந்து இப்போது 3 அடி நீளத்தில இருக்காங்க.
விட்டா வளருவாங்க.
எங்கே போறது அவ்வள்வு பெரிய தொட்டிக்கு.?
அப்புறம் நாங்கள் இடம் மாற வேண்டியதுதான்.
அதாவது சுவரோரம் உட்கார வேண்டி வரும்.
அவருக்கு தனி வாட்டர் purifier, air cleaner ,லைட் தனி.
அவரு தொட்டிக்கு உள்ள இருந்தே நம்மளை சர்வே பண்ணுவாரு.
வர சைவ ஆளுங்களுக்கு எல்லாம், சுத்தி வரும் குட்டி மீன்களை பெரிசோட கூட விளையாடும் என்று சொல்லுவோம company.
இப்போது எல்லோருக்கும் தெரியும். big eats small,
என்ன செய்வது!
பக்கத்தில போனா அம்மா என்கிறது.
என்னது மீனாவது குரல் கொடுப்பதாவதுனு ஒரு மாதிரி என்னைப் பார்க்க வேண்டாம்.
மீனாட்சிக்கு வேற யாரையும் தெரியாதே.
அதனாலே தன் மொழியில் என்னைக் கூப்பிடுகிறது.
அவ்வாளவுதான்.

மே மாதத் திருமணங்கள் 2 ஆம் பாகம் கீழ நத்தம்

Thursday, August 02, 2007 ஆனந்தம் ஆனந்தமே ஜயாநாராயணன் கல்யாணம் சுபமே நடுவில் கடிதங்கள் ,கேள்விகள் மாப்பிள்ளைக்கு சூட், பெண்ணுக்கு எத்தனை பட்...